search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்"

    • ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.
    • எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது.

    சென்னை:

    வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை தி.மு.க. அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது?

    சசிகலாவுக்கு வேண்டப்பட்டவரும் அ.தி.மு.க. பிரமுகருமான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் ஏற்கனவே அதிரடியாக மீட்கப்பட்டு இருந்தது. இத்தனை வருஷ ஆக்கிரமிப்பா என மலைக்க வைக்கும் அந்த ஆக்கிரமிப்பின் கதையை பார்ப்போம்.

    சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, கதீட்ரல் சாலையில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலம் 23 ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது. அந்த இடத்தை தோட்டக்கலை சங்கத்திற்காக 1910-ம் ஆண்டு அரசு வழங்கியது. காலப்போக்கில் அந்த நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் கைக்குச் சென்றது. 'விவசாய தோட்டக் கலைச் சங்கம்' என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்தார். அந்த இடத்திற்கு பட்டா பெற்று தோட்டக்கலை கிருஷ்ண முர்த்தி ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1989-ல் கலைஞர் ஆட்சியின் போது 17 ஏக்கர் நிலம் சட்டப்படி மீட்டகப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீதியுள்ள நிலத்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அந்த நிலத்தை ஒட்டி உட்லன்ஸ் ட்ரைவ்-இன் ஓட்டல் இருந்தது. ஒரு காலத்தில் சென்னையின் லேண்ட் மார்க்காக அந்த ஓட்டல் பிரபலம். காரில் அமர்ந்தபடியே வி.ஐ.பி.கள் எல்லாம் வந்து அந்த ஓட்டலில் சாப்பிடுவார்கள். அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் டிரைவ்-இன் உணவு விடுதி வசம் இருந்த நிலத்தை கலைஞர் அரசு மீட்டு, செம்மொழிப் பூங்காவை உருவாக்கியது. மீதமுள்ள நிலத்துக்கு தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தனிநபர் பட்டா பெற்று அவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்த சட்டப் போராட்டத்தால் மீதியுள்ள 6 ஏக்கர் நிலம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். இந்த இடம் முழுவதுமாக அரசு கையகப்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது. 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 115 கிரவுண்ட் நிலம் சட்டப் போராட்டம் மூலம் மீட்டதோடு ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் கலைஞர் பூங்காவாக மாற்றி திறந்து வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இந்த கோபம்தான் பழனிசாமிக்கு இப்போது ஜிப்லைன் பழுதில் வெளிப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ண மூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்ப பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே... என்ற ஆத்திரம்தான் காரணம்.

    எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது போல் ஜிப்லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

    பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை. மேலும் ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். சென்ற அந்த இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி தேங்கினர். பின்னர் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு இறங்குதளம் சென்றடைந்தனர்.

    ஆகவே எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே. இப்பூங்காவிற்குள் நுழைய பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜிப்லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீறூற்று போன்றவை அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • தமிழ்நாட்டில் 4.58 லட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.
    • 37,638 விவசாயிகளிடமிருந்து ரூ.597.225 கோடி மதிப்பிலான 54,993 மெ. டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 4.58 லட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.

    கொப்பரையின் சந்தை விலை குறைந்த பட்ச ஆதரவு விலையை விடக் குறையும்போது தென்னை விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாட்டில் மத்திய அரசின் விலை ஆதரவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி அரவைக் கொப்பரை கிலோ ரூ.108.60 என்ற வீதத்திலும், பந்துக் கொப்பரை கிலோ ரூ.117.50 என்ற வீதத்திலும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையத்திற்காக (என்.ஏ.எப்.இ.டி.) குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

    தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் 1.4.2023 முதல் 30.9.2023 வரையிலான காலகட்டத்தில் 37,638 விவசாயிகளிடமிருந்து ரூ.597.225 கோடி மதிப்பிலான 54,993 மெ. டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    வெளிச்சந்தையில் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதலுக்கான கால அளவினை நீட்டிக்க வேண்டி தொடர் கோரிக்கை வரப்பெற்றதைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமரை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கொப்பரை கொள்முதலுக்கான இலக்கு 56 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து 90ஆயிரம் மெட்ரிக் டன்னாக (அதாவது கூடுதலாக 34,000 மெ.டன்) உயர்த்தப்பட்டதுடன் கொள்முதல் செய்யும் கால அளவும் 26.11.2023 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையும் 06.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

    ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள தென்னை அதிகம் சாகுபடி செய்யப்படும் 24 மாவட்டங்களில் உள்ள 75 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது கொப்பரைத் தேங்காயை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா?
    • தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும்-போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளி நடப்பாவது செய்திருக்க வேண்டாமா?

    சென்னை:

    அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை" என மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோசி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார். அதுவும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேட்ட கேள்விக்கு அவ்வாறு எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்துள்ளார்.

    சென்னையில் "வீராவேசம்" செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா?

    இங்கே "மண்ணையும், மக்களையும் காப்போம்" என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, "என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்" என்று மத்திய பா.ஜ.க. மந்திரி, அதுவும் அன்புமணி ராமதாசே விரும்பி இடம்பெற்றுள்ள "டெல்லி தேசிய ஜனநாயகக் கூட்டணியின்" மந்திரி அறிவித்த பிறகும், ஏன் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்?

    தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும்-போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளி நடப்பாவது செய்திருக்க வேண்டாமா? அதிகபட்சமாக "இனி நாங்கள் டெல்லி அளவில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இல்லை" என்று அறிவித்து விட்டு விமானம் ஏறிச் சென்னைக்கு வந்திருக்க வேண்டாமா?

    வட மாவட்ட மக்களின் நலனுக்கும், உழவர்களின் உரிமைகளுக்காகவும் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓயாது உழைக்கிறார். மத்திய அரசுடன் போராடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இன்னும் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மண்ணையும், மக்களையும் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று நம்பியிருக்கும் உழவர்களை, வட மாவட்ட மக்களை-உங்களின் இது போன்ற "கபட நாடகங்கள்" மூலம் திசைதிருப்பி விட முடியாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிக விளைச்சல் பெற்ற மூன்று விவசாயிகளுக்கு விருதும், பணப்பரிசும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
    • இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு, ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை திருச்சி, கேர் பொறியியல் கல்லூரியில் "வேளாண் சங்கமம் 2023" விழாவினை சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நாளை 27-ந்தேதி வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்த உள்ளார். தொடர்ந்து, நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியினையும் துவங்க இருக்கிறார்.

    வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள், புதிய வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான வழிமுறைகள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், அரசின் திட்டப்பலன்களை பெறுவதற்கு முன்பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன.

    இக்கண்காட்சியில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை, வேளாண் பொறியியல், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), கைத்தறி, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், பட்டு வளர்ச்சி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பல்வேறு பயிர்கள் சார்ந்த வாரியங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களும் பங்கேற்கின்றன.

    அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது, நுண்ணீர் பாசன நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பூச்சி மருந்து நிறுவனங்கள், வேளாண் இயந்திர நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வங்கிகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டு பிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளார்கள்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர்ப் பாசனத்திட்டம், இயற்கை வேளாண்மை, ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய இயக்கம், தென்னையில் பயிர்ப்பாதுகாப்பு, பாரம்பரிய நெல் ரகங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில், செங்குத்து தோட்டம், நீரியல் தோட்டம், மாடித் தோட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதல், மதிப்புக்கூட்டுதல் போன்ற உழவர்களுக்காக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப்பதிவு மையம், தமிழ் மண்வள இணையதளம் மூலம் மண்வள அட்டை விநியோகம் போன்ற இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கண்காட்சியுடன், விவசாயிகள் வாங்கிச் சென்று தங்கள் பண்ணையில் சாகுபடி செய்வதற்கேற்றவாறு, புதிய ரகங்களின் காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளில் ஒட்டு ரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்டக்கலவை உரங்கள், உயிர் உரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்களும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    அங்கக வேளாண்மை, விளைபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள், வேளாண் காடுகள் மூலம் வருமானம், நவீன வேளாண்மையில் புதிய உரங்களின் பயன்பாடு, வேளாண் இயந்திர மயமாக்கல் மற்றும் மதிப்புக் கூட்டல், தோட்டக்கலை சாகுபடியில் புதுமைகள், மின்னணு வேளாண்சந்தை மூலம் மின்னணு வர்த்தகத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள், வேளாண்மையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், சிறுதானிய சாகுபடி, முருங்கை சாகுபடி மற்றும் ஏற்றுமதி போன்ற பத்து தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க விவசாயிகளும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள விருக்கிறார்கள்.

    விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களின் விற்பனையினை எளிதாக்கும் வகையில், கொள்முதல் செய்பவர்-விற்பனையாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது.

    பாரம்பரிய நெல் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அதிக விளைச்சல் பெற்ற மூன்று விவசாயிகளுக்கு விருதும், பணப்பரிசும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சியில் நடைபெற உள்ள கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
    • காலநிலைக்கு ஏற்ப தக்காளி விலை உயர்கிறது, குறைகிறது.

    திருச்சி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 27-ந் தேதி கேர் கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வருகிற 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் கேர் கல்லூரி மைதானத்தில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த வேளாண் சங்கமம் விழாவை வருகிற 27-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிற்சிகள் இங்கு வழங்கப்பட இருக்கிறது. வேளாண் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையின் சார்பாக பயிர் சம்பந்தமாக கருத்துகளை வழங்க இருக்கிறார்கள்.

    வேளாண் வணிகம் சார்பாக கடந்த 10-ந்தேதி சென்னையில் மாபெரும் கண்காட்சி தொடங்கி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

    திருச்சியில் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. காலநிலைக்கு ஏற்ப தக்காளி விலை உயர்கிறது, குறைகிறது. மற்ற மாநிலங்களை விட தக்காளி விலை தமிழகத்தில் பரவாயில்லை. விலையேற்றத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால் தமிழக அரசு உழவர் சந்தை மூலமாகவும், கூட்டுறவு துறை மூலமாகவும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. சில காலங்களில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்து விலை கிடைக்காமல் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேளாண் நிதிநிலை அறிக்கைகளை படித்து பல தரப்பட்ட விவசாயிகளும், அறிஞர்களும் பாராட்டி வருகின்றனர்.
    • விவசாயிகளின் தேவை என்ன என்பதை அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது.

    சென்னை:

    வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 வருடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமலும் அறிந்து கொள்ளாமலும் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வெறும் தென்னங்கன்று மட்டும் வழங்கியதாக கூறுவது திட்டத்தின் தனித்தன்மையை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்களின் பிதற்றலாகும்.

    திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவு பூங்கா அமைப்பது என்பது இன்று விதைத்து நாளை முளைக்கும் செயல் அல்ல. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தும் வகையில் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நபார்டு வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இதுபோன்ற திட்டங்கள் செயல்வடிவம் பெற்று நடைமுறைக்கு வரும்போது தான் முழு பலனும் விவசாயிகளுக்கு சென்று சேரும்.

    கடந்த வேளாண் பட்ஜெட்டில் வாசித்த பல திட்டங்கள் இந்த ஆண்டிலும் வார்த்தை மாறாமல் படித்ததாக கூறுவது நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படிக்காமல் கருத்து கூறுவது முறையல்ல. மதிப்பு கூட்டல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது.

    வேளாண் நிதிநிலை அறிக்கைகளை படித்து பல தரப்பட்ட விவசாயிகளும், அறிஞர்களும் பாராட்டி வருகின்றனர். விவசாயிகளின் தேவை என்ன என்பதை அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துகள் ஏதும் இருந்தால் அதனை அரசுக்கு தெரியப்படுத்தினால் அதனை வரவேற்க இந்த அரசு எப்போதும் தயாராக உள்ளது. அதை விடுத்து 'வெறும் வாயில் வடை சுடும் பட்ஜெட்' என்று கூறுவது வேளாண்மையை பற்றி சற்றும் தெரியாமல் பட்ஜெட் முக்கியத்துவத்தை உணராமல் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பேசுபவர்களின் கருத்தாக இருக்கலாம்.

    முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பவர்கள் வெளியிட்ட கருத்தாகும்.

    முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் முன்னர் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பி.ஆர்.பாண்டியன் எந்தவித ஆக்கப்பூர்வமான கருத்தினை தெரிவிக்காமல் இருந்துவிட்டு அல்லது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாத நிலையில், விவசாயமே பார்க்காத நபர் ஒருவர் தற்பொழுது விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • என்எல்சி நிறுவனத்திற்காக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல.
    • 3,000 பேருக்கு என்எல்சி நிறுவனம் புதிய வேலை வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * என்எல்சி நிறுவனத்திற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.

    * என்எல்சி நிறுவனத்திற்காக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல.

    * 3,000 பேருக்கு என்எல்சி நிறுவனம் புதிய வேலை வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    * ஏற்கனவே நிலம் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு, தற்போது கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பயிர் செய்யப்படும் கேழ்வரகு நேரடியாக விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ 35 ரூபாய் 78 பைசாவிற்கு என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • 40 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சாப்பிட்ட உணவுகளை இன்று உலகம் முழுவதும் கடைபிடித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த மதிகோண்பாளையம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ராகி நேரடி கொள்முதல் நிலைய திறப்பு விழா கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு ராகி சான்று விதைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க அரசு அனுமதி அளித்ததையடுத்து தருமபுரியில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதிரியான கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 2646 எக்டேர் கேழ்வரகு பயிர் செய்யப்படுகிறது. அவ்வாறு பயிர் செய்யப்படும் கேழ்வரகு நேரடியாக விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ 35 ரூபாய் 78 பைசாவிற்கு என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சாப்பிட்ட உணவுகளை இன்று உலகம் முழுவதும் கடைபிடித்து வருகின்றனர்.

    விவசாய நிதி நிலை அறிக்கை தயார் செய்யும் பொழுது விவசாயிகளை கேட்டறிந்து அவர்களின் தேவைகளின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தியதை பேரில் கடந்த இரண்டு நிதிநிலை அறிக்கையை தயார் செய்ததாக கூறினார்.

    • கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.
    • மரபுசாரா நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய விதை நெல் விநியோகிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து, வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.

    மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் 2021-22-ம் நிதியாண்டில் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டம் தமிழகத்தில் முதன்முதலாக வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அறுவதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறு மணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, சிவப்பு கவுனி, சிவன் சம்பா, தங்க சம்பா, தூயமல்லி, பூங்கார் போன்ற பாரம்பரிய நெல் வகைகள் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தவை என்பதால் இத்தகைய மரபு சார் நெல் ரகங்களைத் திரட்டி, பலமடங்காக பெருக்கி, விவசாயிகளுக்கு விநியோகம் செய்து, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திரு நெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 33 அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் மேற்கண்ட 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்துள்ளது.

    உற்பத்தி செய்யப்பட்ட 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள், நடப்பாண்டில் 10,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில், 50 சதவீத மானியத்தில், அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.12.50 என்ற மானிய விலையில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகள், அதிகபட்சமாக 20 கிலோ மட்டுமே என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும்.

    இத்திட்டமானது சென்னை மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

    மரபுசார் நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் மரபுசார் நெல் இரகங்கள் இனத்தூய்மையுடன், விதைத் தரத்துடன் விநியோகம் செய்யப்படுவதால், இத்தகைய ரகங்களின் சாகுபடிப் பரப்பு கணிசமாக உயரும். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு நடப்பு சம்பா பருவம் மிகவும் உகந்தது என்பதால், ஆர்வமுள்ள விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்து பாரம்பரிய மரபு சார் நெல் ரகங்களை வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×